நேர்காணல் – இயக்குனர் இரத்னகுமார்

கொரோனா காலம் திரைத் துறையினருக்கு சவாலாகவே அமைந்திருந்தது. அத்தகு சூழலிலும் திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்தது மாஸ்டர் திரைப்படம். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்களிப்பில் இருந்த அதன் எழுத்தாளர் திரு. இரத்னகுமார் அவர்கள், மன்றம் மக்களோடு மனம்விட்டு பேச தொடங்கினார்....

1.குழந்தைப் பருவம்தான் அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத பசுமைப் பருவம் என்று சொல்லலாம்; அவ்வளவு அற்புதமான நினைவுகள் அனைவரின் வாழ்க்கையிலும் நிச்சயம் இருக்கும். உங்களது குழந்தைப் பருவ நினைவுகள் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கண்டிப்பாக, எனக்குப் பார்த்தால் மூன்று வீடுகள் என்று சொல்வேன். முதலில் பிறந்து வளர்ந்த வீடு,பள்ளி மற்றும் பேருந்து. என் வாழ்க்கையில் நான் அதிக நேரம் செலவிட்ட இடங்களில் பேருந்தும் ஒன்று.கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பேருந்தில் பயணித்திருப்பேன்.நான் வளர்ந்த வீடு ஒரு 20 குடும்பங்கள் வசிக்கும் கூட்டுக் குடித்தனம் தான். அதனாலேயே என்னைவிட வயதில் சிறியவர்களுடனும் பெரியவர்களுடனும் நல்ல நட்பு இருந்தது. நாங்கள் பம்பரம் விட்டால் மற்ற அனைத்துக் குடித்தனக்காரர்களும் பம்பரம் விடுவார்கள்.நாங்கள் பட்டம் விட்டால் மற்றவர்களும் சேர்ந்து கொள்வார்கள். பள்ளி வாழ்க்கை என்று பார்த்தால் ஒரு சராசரி மாணவன் நான். புதுமையான படைப்புகளில் மட்டும் ஆர்வம்கொண்டவனாக இருந்தேன்.பள்ளியில் மேத்ஸ்-பயோ பிரிவு தான் எடுத்தேன். இருந்தாலும் போதுமான மதிப்பெண் இல்லாததால் டிப்ளமோ படித்து ஹெச்.சி.எல் இல் வேலைக்குச் சேர்ந்தேன். இயந்திரங்களோடு செய்யும் வேலை, மேலும் வெளி மாநிலச் சூழலும் சேராததால் வேலையை விட்டுவிட்டு, விஷுவல் கம்யூனிகேசன் முடித்தேன். பின்னர் குறும்படங்கள் இயக்கத் தொடங்கினேன்.

2.சிறு வயதில் இப்படித்தான் ஆக வேண்டும் என்று ஆசைகள் இருந்ததுண்டா? அது கைகூடியதா?

 எனக்கு அப்படிப் பெரிய ஆசைகள் இருந்ததில்லை. நான் உயரம் குறைவானவனாகவே இருந்தேன். ஆசைகள் என்றால் உயரமாவது, தாடி மீசை வளர்வது, பைக் ஓட்டுவது போன்றவைதான் என் ஆசைகளாக இருந்தன. தந்தை தினமணியில் நிருபர்; மேலும் சிலம்பத்தை சினிமா மூலம் வளர்க்க முற்பட்டவர். நான் சிலம்பம் கற்க ஆசைப் பட்டேன். ஆனால், அதை நான் வாழ்க்கைத் தொழிலாக்க விரும்பவில்லை.

3.யாரும் நம்மிடம்  நீ சினிமா இயக்குநராக வேண்டும், நீ நடிகராக வேண்டும் என்று சொல்வது பெரும்பாலும் அரிது. நமக்கே திரைப்படங்கள் பார்த்துத் தோன்றலாம், இல்லையெனில் யாரையாவது பார்த்துத் தோன்றி இருக்கலாம்.அப்படி உங்களுக்கும் சினிமாத்துறையில் சேர வேண்டும் என்று முதல்முறையாகத் தோன்றிய தருணம் பற்றியும், உங்கள் ரோல்மாடல் பற்றியும், இறுதியாக இனி நமக்கு சினிமா தான் வாழ்க்கை என்று முடிவெடுத்த தருணம் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்கள்?

எனது தந்தை சினிமா அறிமுகம் கொண்டவர், சினிமா, சிலம்பம், நிருபர் என பன்முகம் கொண்டவர். எனவே அவரிடமிருந்து தான் சினிமா ஆர்வம் வந்திருக்க வேண்டும். சினிமா சார்ந்த பேச்சு எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். அதுதான் என்னை சினிமாவைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. சினிமாவைத் தேர்ந்தெடுத்த பின்தான்  அதிகமாகப் படங்கள் பார்க்கத் தொடங்கினேன். அப்படி என்னை ஈர்த்தவர்களென மணிரத்னம், செல்வராகவன்,பாரதிராஜா போன்றோரைச் சொல்லலாம்.

4. திரைத்துறையில்  குறிப்பாக ஏன் இயக்குநராக விரும்பினீர்கள்? கதாநாயகனாகவோ இசையமைப்பாளராகவோ வேண்டுமென்று தோன்றியதுண்டா?

ஒரு நடிகரால் நடிக்க மட்டுமே முடியும். அதுவும் குறிப்பிட்ட பாத்திரமாகத்தான் நடிக்க முடியும். ஆனால் ஒரு இயக்குநர் அனைத்துப் பாத்திரங்களிலும் நடிக்கிறார், கதை எழுதுகிறார், படத்தை இயங்க வைக்கிறார்; எனவே தான் இயக்குநராக விரும்பினேன். ஒரு படம் இயக்குகிறோமென்றால் அதில் பல யுக்திகளைச் சேர்த்து மெருகேற்றி, ஒரு குழந்தைபோல் பாவித்துக்கொள்ள இயக்குநரால் தான் முடியும்.எனவேதான் இயக்குநராக விரும்பினேன்.

5.அனைவருக்கும் இதயம் தொட்ட பாடல்களென்று ஒருசில பாடல்கள் கண்டிப்பாக இருக்கும். உங்களுக்கு மிகவும் பிடித்த 5 பாடல்கள் என்னென்ன மற்றும் நீங்கள் அந்தப் பாடல்களில் எதை ரசித்தீர்கள், ஏன் பிடித்தது?

உள்ளத்தில் நல்ல உள்ளம்

பெரும்பாலானோர் இதை ஒரு சோகப் பாடலாகவே பார்க்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு உத்வேகம் தரும் பாடல். நம்மை நாமே தியாகியாக உணர வைக்கும் பாடல்.

காதல் பாடல்களென்றால் “காதலெனும் தேர்வெழுதி” “வெண்ணிலவே வெண்ணிலவே “ போன்ற பாடல்கள் பிடிக்கும்.

சங்கமம் திரைப்படத்திலிருந்து “ஆலால கண்டா”  பாடல் பிடிக்கும். தந்தை அன்பு சார்ந்த பாடலென்பதாலும், எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் பாடியதென்பதாலும் அது என்னை மெய் சிலிர்க்க வைத்த பாடல்.

மேலும் கில்லி  “அர்ச்சுனரு வில்லு”  போன்ற பாடல்களும்  பிடிக்கும்.

6.நீங்கள் சினிமாவைத் தேர்ந்தெடுத்தபோது உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

நான் சில காலத்திற்கு துணை இயக்குநராக  இருந்ததையே குடும்பத்திடம் மறைத்திருந்தேன்.பின்னர் இதை நான் வீட்டினரிடம் சொல்லும்போது “இதைப்போய் ஏன் மறைத்தாய்?” என்றே கேட்டனர். அப்போதுதான் நான் என் தவற்றை உணர்ந்தேன். இருப்பினும் எதுவாக இருந்தாலும் திருமண வயதுக்குள் வைத்துக்கொள்ள அறிவுறுத்தினர். மேலும் குடும்பச்சுமை எனக்குத் தடையாகாமல் முழு ஒத்துழைப்பைத் தந்தனர்.

7.சினிமா தான் என்றானது முதல் துணை இயக்குநரானது வரை உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?அது பற்றிக் கூறுங்கள். எந்த இயக்குநரிடம் துணை இயக்குநர் ஆகவேண்டுமென்று நினைத்தீர்கள்? அந்த இயக்குநர்களை எப்படி அணுகினீர்கள்?

நான் செல்வராகவன், மணிரத்னம் இருவரிடமும் துணை இயக்குநராக விரும்பினேன்.வசந்தபாலன் அவர்களிடம் கூட வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அப்போது நான் முழுப்படத்தையும் எடுத்துவிடும் அனுபவத்தையும் “கருப்பம்பட்டி” திரைப்படம் மூலம் பெற்றிருந்ததால் படம் இயக்கத் தயாராகினேன்.அப்படத்தின் இயக்குநர் அஜ்மன் அவர்களை அணுகும்போது அதற்குமே முதலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அங்கேயே வேடிக்கை பார்ப்பதற்கு நின்றேன்.பின்னர் எனது ஆர்வத்தைக் கண்டு என்னைத் துணை இயக்குநராகச் சேர்த்துக் கொண்டார். பின்னர் படிப்படியாக படத்தின் முழு வேலைகளிலும் எனது பங்கைக் கொடுத்தேன்.

8.பொதுவாக பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி பற்றிய நிறைய கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இருக்கும்; ஆனால் அனுபவங்கள் எதிர்பாராததாகவே இருக்கும். அதுபோல நீங்கள் நினைத்தது போல் சினிமா உலகம் இருந்ததா ?

தமிழ் சினிமா இப்படித் தான் இருக்கும் என்று ஓரளவிற்குத் தெரிந்து வைத்திருந்தேன். துணை இயக்குநர்களைத், தனது வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்துவர் என்ற யூகம்  இருக்கிறது. நான் இயக்குநராக வந்த சமயம், பல குறும்பட இயக்குநர்கள் வளர்ந்து வந்தனர். அவர்கள் திறமை மீது மரியாதை இருந்தது.இப்பொழுது அவர்களை மதிப்போடும் , மரியாதையோடும் இயக்குநர்கள் நடத்துகிறார்கள் ஆனால் எனக்கு இது போன்ற எந்த அனுபவமும் இல்லை என்பது எனது பாக்கியம். நாம் பொறுமையாக இருந்தால் நாம் நினைத்தது நடக்கும்.

9.உங்களுக்கு எந்தக் காலகட்டத்தில் படம் இயக்கலாம் என்று தோன்றியது அல்லது படம் செய்வதற்கு வாய்ப்பு தேடி வந்ததா ?

நான் ஒரு திரைக்கதையைப் பாதியில் எழுதிக் கொண்டிருந்தேன், அதை என் நண்பருக்கு அனுப்பி, அது அவருக்கு மிகவும் பிடித்துப் போகத் தான் செய்து கொண்டு இருந்த படத்தைப் பாதியில் விட்டு, மது என்ற குறும்படம்  தயாரித்தோம். அதுவே பிறகு மேயாத மான் என்ற படமாக அமைந்தது. எனது எழுத்துத்  திறமையில் நம்பிக்கை வைத்து எனது நண்பன் தான் பணியாற்றிக் கொண்டிருந்த படத்தை விட்டு என்னுடன் சேர்ந்தார். அது மட்டும் அல்லாமல் குறைந்த பொருட்செலவில் கதை நன்றாக அமைந்தால் மக்களை அந்தப் படம் சென்றடையும் என்று “நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்” என்ற படம் நிரூபித்தது. இதனால் நாங்கள் துணிந்து பட இயக்கத்தில் இறங்கினோம்.

10.உங்களது படங்களுக்கு நடிகர்களை எப்படித் தேர்வு செய்வீர்கள் ?

நான் கதை எழுதும்போது நடிகர்களைப் பற்றி பெரிதாகச் சிந்திப்பதில்லை, ஆனால் படம் ஆரம்பிக்கும் முன், நாம் நமக்கு தெரிந்தவர்கள் மூலம் படங்களில் நடித்தவர்கள் அல்லது நமக்கு தெரிந்தவர்களை அழைத்து ஆடிசன் செய்து பார்க்கலாம் அல்லது படத்திற்கு, இந்தக் கதாபாத்திரத்துக்கு நடிகர் தேவை என விளம்பரம் செய்த பிறகு தேர்வு செய்யலாம்.

11.உங்கள் முதல் படம் மேயாத மான் வெளியாகும் பொழுது உங்களுக்கு எப்படி இருந்தது மற்றும் மக்கள் எப்படி வரவேற்றனர் ?

படம் எடுப்பதில் பல கஷ்டங்கள் உள்ளன. நாங்கள் படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கஷ்டம்  அனுபவித்தோம். மேயாத மான் படத்தில் கல்யாணக் காட்சி எடுக்கும்பொழுது பெரிய மண்டபம் கொடுத்தார்கள் ஆனால் அதற்கேற்ப மக்கள் இல்லை அதனால் நான் இந்த படத்தில் நடிக்கும் நடிகைக்கு இருக்கும் புகழை வைத்து, அவருக்கு தெரிந்தவர்களை அழைத்து, அந்தக் காட்சியை எடுத்து முடித்தோம. இப்படிப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன..

12.மேயாத மான் வெளியாகும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது ?

நாம் எப்படி யோசிக்கிறோமோ, அப்படியே அமைந்தால் அதுவே பெரிய வெற்றி. ஒரு படத்தின் வெற்றி,தோல்வி முக்கியமல்ல. தீபாவளி வெளியீட்டுச் சமயம், “மெர்சல்” படம் வெளியானது, திரையரங்கங்கள் போதுமானதாகக் கிடைக்கவில்லை. பல நாட்களுக்குப் பிறகு மெல்ல மெல்ல மக்கள் மேயாத மான் பற்றிப் பேசத் துவங்கினர். பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் என் படைப்பைப் பாராட்டினார்கள். எது எப்படி இருந்தாலும் எனக்கு மேயாத மானை விட ஆடை திரைப்படம் திருப்தியாக அமைந்தது.

13.மேயாத  மான் படத்தில் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருப்பீர்கள், அது தானாக அமைந்ததா ?

மேயாத மான் படத்தின் முதல் 25 நிமிடம் இந்தக் குறும்படம் தான், இதில் ஹீரோவுக்கு ஒரு தங்கை கதாபாத்திரம் இருக்கும். இதில் ஹீரோவுக்கும் தனது தங்கைக்கும் முரண்பட்ட இரு காதல் கதைகள் இருக்கும். அந்தத் தங்கையின் காதல் கதை பெரிதும் பேசப்பட்டது. எனக்கு எந்தக் கதையும் எழுதும்பொழுது புதிதாக வரும் யோசனைகளைக் கொண்டு,அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வேன். அப்படி தான் இந்தத் தங்கையின் காதல்  கதையும்.

14.மாஸ்டர் படத்தில் பணியாற்ற வாய்ப்பு எப்படி கிடைத்தது ?

நானும் இயக்குநர் லோகேஷ் அவர்களும் குறும்படங்கள் செய்துள்ளோம். எங்கள் இருவரின் குறும்படத்திற்கும் ஒரே இசையமைப்பாளர் தான். அவரின் ஸ்டுடியோவில் லோகேஷிற்கு எனது குறும்படத்தைக் காண்பித்தார். லோகேஷிற்கு மிகவும் பிடித்து விட்டது. பிறகு ஒரு நேர்காணலில் என் கருத்துகள் பலவும் லோகேஷிற்குப் பிடித்துப்போக தன்னுடன் பணியாற்ற அழைத்தார். அப்போது அவர் “கைதி” படம் செய்து கொண்டிருந்தார். நான் “ஆடை” படம் எடுத்துக் கொண்டிருந்தேன் அவரது படத்திற்குப் பல யோசனைகளைக் கூற அவர் அவற்றைப் படத்தில் அப்படியே வைத்துக்கொண்டார்.பிறகு அவருக்கு மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்னையும் அவருடன் பணியாற்ற அழைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

15.வசனம் எழுதும்பொழுது எதை மனதில் வைத்து எழுதுவீர்கள் ?

மாஸ்டர் படத்தில் வசனங்கள் மிக அளவாக வைத்துள்ளோம். எப்பொழுதும் போல் விஜய் அவர்கள் பேசும் பன்ச் டயலாக்-கள் மற்றும் அரசியல் வசனங்கள் இல்லாமல் ஒரு வேறுபட்ட படமாக இருக்க வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு கொடுக்கும்  வசனங்களைக் குறைத்துக் கொண்டோம் .எந்த விவகாரத்திலும் சிக்காமல் வசனங்களை அமைத்தோம். இது பெரிய வரவேற்பைப் பெற்றது.

16.நெருப்புக் கோழி கதை வசனம் எப்படி யோசித்து எழுதினீர்கள் ?

இயக்குநர் லோகேஷும் நானும் அவரது பள்ளி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஒரு நண்பரைக் கேலி செய்துகொண்டிருந்தனர்.அந்த நண்பர் சொன்னார், முட்டையிடும் வலி கோழிக்குத் தான் தெரியும் என்று அவர் பேச, நாங்கள் சிரித்துவிட்டோம்.ஆனால் இரண்டு மாதம் கழித்து மாஸ்டர் படத்திற்குத் திரைக்கதை எழுதும்பொழுது, அதை ஞாபகம் வைத்து கோழிக்கு பதிலாக நெருப்புக் கோழியென்று எழுதினேன். இந்த வசனம் லோகேஷ் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது மற்றும் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.

17.நீங்கள் இயற்றிய படங்களில் உங்களுக்குப் பிடித்த வசனம் எது?

“வயித்துக்கே வழியில்லாதப்போ வயித்துக்கு மேலயும் கீழயும் பத்தி எப்படி யோசிக்கிறது”_மேயாதமான்.

18. மாஸ்டர் படத்தில் விஜய் & விஜய் சேதுபதி அவர்களுடன் நீங்கள் பணியாற்றிய தருணங்கள் பற்றிக் கூறுங்கள்.

இருவரும் தமிழ் சினிமாத் துறையில் மக்களால் போற்றிக் கொண்டாடப்படும் இரண்டு பெரிய துருவங்கள். இருவரும் திரைப்பட வேலையைத் தாண்டி மிகவும் அக்கறை உடையவர்கள். என்னுடைய முயற்சிகள்,வேலைகளைப் பற்றி என்னிடம் விசாரிக்க கூடியவர்கள்.

விஜய் அவர்களைப் பிரியமுடன் படப்பிடிப்பின் போது நேரில் பார்த்தேன். அதன்பின்னர் இந்த மாஸ்டர் திரைப்படத்தில் தான் சந்திக்கிறேன். அவரை எப்போது பார்த்தாலும் நீண்ட நாட்கள் பழகியது போல எனக்கு ஒரு நெருக்கம் இருவரிடையே தோன்றும்.  இவர் தோளில் கை போட்டும் பேசுவார். தோளில் கை போட விட்டும் பேசுவார் என்று நடிகர் தனுஷ், விஜய் அவர்களைப் பற்றிக் கூறியது முற்றிலும் சரி. அவ்வளவிற்கு நம்முடன் நெருங்கிப் பழகும் தன்மை உடையவர்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு முன்பே நான் விஜய் சேதுபதி அண்ணாவிடம் எனது படம் பற்றிக் கதைகளைக் கூறியிருக்கிறேன் மற்றும் எனது குறும்படம் ஒன்றைக் கொடுத்து பார்க்கச் சொன்னேன். அவர் அதைப் பார்த்து விட்டு மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று நீண்ட நேரம் பேசினார்.

ஆரம்பத்தில் மிகவும் பயத்துடன் வேலை செய்ய ஆரம்பித்தேன். பிறகு அவர்கள் என்னை அவர்களில் ஒருவராகப் பார்க்க ஆரம்பித்தனர். எனவே இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் ஒரு பெரிய பரிசு எனக் கருதுகிறேன்.

19.நடிகர்கள் விஜய்,விஜய் சேதுபதி அவர்களுடன், நீங்கள் பணியாற்றும் போது அவர்களிடம் நீங்கள் கவனித்த ஒரு சிறப்பம்சம் என்றால் நீங்கள் எதைச் சொல்லுவீர்கள்?

விஜய் சேதுபதி அண்ணா,  ‘நாம் இதைத் தான் பேச வேண்டும்’, ‘இவ்வளவு தான் பேச வேண்டும்’, ‘நாம் இப்படிப் பேசினால் பிறர் எவ்வாறு நினைப்பார்கள்?’ என எதுவும் மனதில் இல்லாமல், ஒரு வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி நாம் பேசி மகிழ்ச்சியாக இருப்பது போல் மிகவும் இயல்பாகப் பேசிப் பழகும் தன்மை உடையவர்.

விஜய் அவர்களை ஒரு முறை பார்த்துப் பேசும் போது, நாம் அவரிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களைப் பற்றி நினைவில் வைத்துக் கொண்டு அடுத்தமுறை பார்க்கும் போது அந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகே மற்றவிஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்.

இருவரும் ஆர்வமாகப் பேசிப் பழகி, நமக்காக நேரம் ஒதுக்கக் கூடியவர்கள்.

20.மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் & விஜய் சேதுபதி இருவருக்கும் நீங்கள் எழுதிய வசனங்கள் சண்டைக் கோழி மாதிரி மாறி மாறி போய்க்கொண்டே இருந்தது. அந்தத் திரைப்படத்தில் இவர்கள் இருவருக்கும் நீங்கள் எழுதிய வசனங்களில் உங்களுக்கு பிடித்தவைகள் என்ன?

 விஜய்:- “ அது என்னடா சொன்னான் அவ ? என்ன புடுச்சவன-லாம் கொல்ல போறானா? டேய்! என்ன புடுச்சவன்லாம் கோடி பேர் இருக்கான் டா வெளில. முடிஞ்சா தொட சொல்லுடா பாப்போம்.”

விஜய் சேதுபதி:-  “ இந்த ஆஸ்டிரிச் தெரியுமா? நெருப்புக் கோழி. இப்டி இருக்குமே! நெருப்புக் கோழி.அதோட முட்டை பாத்திருக்கியா? இவ்ளோ பெருசா. வாவ்! எவ்ளோ பெரிய முட்டை முட்டை போடுற கோழிக்குதான் தெரியும் * வலினா என்னானு.”

21.ஒரு படத்திற்கான கதையை எழுதி முடித்தவுடன் இந்தக் கதை சரியாக இருக்குமா? இல்லை சற்று வேறு மாதிரி மாற்றி அமைக்கலாமா? என்ற கேள்விகளுக்கு யாரை அணுகினால் தாங்கள் மனநிறைவு பெறுவீர்கள்?

கல்லூரி நண்பர்கள், என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள், இரும்புத்திரை திரைப்பட இயக்குநர் மித்திரன், இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் மற்றும் மாஸ்டர் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது சற்றுத்  தெளிவு கிடைக்கும்

22.”இந்தச் சிக்கல் எல்லாம் வரும் என்று எவனும் எங்கிட்ட முன்னாடியே சொல்லவே இல்லையேடாஅப்படி நீங்கள் சினிமாத் துறைக்குள் சென்றவுடன் நினைத்த சில விஷயங்கள் பற்றி கூறுங்கள்.

ஒவ்வொரு திரைப்படம் தயாரிக்கும் போதும் எனக்கு நிறைய எண்ணங்கள் தோன்றும்; பொதுவாகவே ஒவ்வொரு திரைப்படமும் தயாரித்து வெளியான பிறகே அத்திரைப்படத்தின் நிறை குறைகளை தெளிவாகப் பிரித்தறிய முடியும். அதன் பின்னர் அத்திரைப்படத்தில் நாம் ஏற்கனவே இடம்பெறச் செய்ய வேண்டும் என எண்ணிய விஷயங்களை அடுத்த திரைப்படத்தில் இடம்பெறச் செய்யலாம்.

23. சினிமாத் துறைக்குள் நுழைய விரும்புவோருக்கு நீங்கள் கூற விரும்புவது ?

எப்போதும் தெளிவாக, வெளிப்படையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். நம்மைச் சுற்றி நடப்பதை நன்றாகக் கவனியுங்கள். உங்களைப் பற்றி உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நன்றாகக் கேட்டு தெரிந்து, அவர்கள் கூறியவற்றில் உங்களுக்கு எது தகுந்தது, எது சரியாக இருக்கும் என ஆராய்ந்து அதற்காகத்  தொடர்ந்து செயலாற்றுங்கள். மற்றவர்களுடன் உங்கள் திறமைகளை ஒப்பிட்டு அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பொறுமையுடன், சந்தோசமாக  உங்கள் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

தமிழ்த் திரைப்படத்துறை

திரைப்படத்துறை, திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடும் ஒரு தொழிற்துறையாகும்.  இத்துறை திரைப்படங்களை நேர்த்தியான வகையில் தயாரித்து, முறையான விளம்பரங்கள் மூலம் அறிமுகப்படுத்தி, திரையரங்குகள் போன்ற தளங்களில் வெளியிட்டு வணிகம் செய்கிறது. விநியோகிப்பாளர்கள் படத்தை விளம்பரப்படுத்திப்,  பல நகரங்களில் வெளியிட்டு விற்கிறார்கள். ஒரே மொழித் திரைப்படங்கள் வேறு நாடுகளிலும் வெளியிடப்படுகின்றன.

தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் தமிழ் மொழித் திரைப்படத்துறை, கோலிவுட் என்று அழைக்கப்படுகிறது.இது இந்தியாவில் இந்தித் திரைப்படத்துறைக்கு அடுத்து, பரவலாக அறியப்படும் திரைத்துறை ஆகும். 1980கள் வரை சென்னையில் கோடம்பாக்கத்தில் இருந்த திரைப்படத் தயாரிப்பு வசதிகளை முன்னிட்டு, பெரும்பாலான மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களும் இங்கிருந்தே தயாரிக்கப்பட்டன.

முதல் தமிழ் ஊமைத் திரைப்படம், 1918 ஆம் ஆண்டில், இயக்குநர் ஆர். நடராஜ முதலியார் என்பவர் இயக்கிய, ‘கீசக வதம்’ என்ற திரைப்படம் ஆகும்.  முதல் பேசும் படமான, எச்.எம்.ரெட்டி என்பவர்  இயக்கிய ‘காளிதாஸ்’ என்ற திரைப்படம் 1931 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது.

இந்தியாவின் பல மாநிலங்களில் வாழும் தமிழர்கள், தமிழ்த் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதுடன், புதிதாக வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் உடனுக்குடன் கேரளம், ஆந்திரப்பிரதேசம்  வட இந்திய மாநிலங்கள் ஆகியவற்றில் நேரடியாகவோ மொழிமாற்றியோ காண்பிக்கப்படுகின்றன. வணிக வெற்றி பெறும் பல தமிழ்த் திரைப்படங்கள் , பின்னர் இந்திய மொழிகளில் மொழிமாற்றப்பட்டு வெளியிடப்படும் வழக்கம் உண்டு. உதாரணமாக ரோஜா என்ற திரைப்படத்தின் கதையை, பிற மாநிலத்தவர் வாங்கி மீண்டும் அம்மாநில மொழி நடிகர்களைக் கொண்டு படமாக்கியதைக் குறிப்பிடலாம் . சிலவேளைகளில், முன்னணி இயக்குநர்கள் ஒரே கதையைப் பல மொழிகளில், ஒரே நடிகர் குழுவினருடன்  எடுப்பதும் உண்டு .  பாம்பே, ஹேராம், ஆய்த எழுத்து போன்ற திரைப்படங்கள் இதற்குள் அடங்கும்.

இந்தியாவில் இருந்து வந்த, தமிழ்த் திரைப்படங்கள், அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் திரையிடப்படுவதன் மூலம் கோலிவுட் , உலகத்திரைப்படத் துறையில் தனக்கான ஒரு தனி அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.  ரஜினிகாந்த் மற்றும் மீனா நடித்த முத்து திரைப்படம், ஜப்பானில் குறிப்பிடத்தக்க அளவு ஓடியதாகச் சொல்லப்படுகிறது‌. ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக, தமிழ்த் திரைப்படங்களும் ஒரே நாளில் உலகெங்கும் வெளியிடப்படுகின்றன.

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இடையில், தமிழ்த் திரைப்படங்கள் ஒரு வலுவான பாலமாகத் திகழ்கின்றன. நிகழ்காலப் பேச்சுத் தமிழ், நாட்டு நடப்புகள், பண்பாட்டுப் போக்குகள் ஆகியவை குறித்த தோற்றத்தை நிறுவுவதில் தமிழ்த் திரைப்படங்களின் பங்கு இன்றியமையாதது.

தமிழரின் அன்றாட வாழ்விலும் ஆர்வங்களிலும் தமிழ்த் திரைப்படத் துறை ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரைப்படத் துறையை சார்ந்து பல தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தமிழ்த் திரைப்படங்கள் ஊடாக நாட்டு விடுதலை கருத்துகள், சமூக சீர்திருத்தக் கருத்துகள், அரசியல் இயக்கங்களின் முழக்கங்கள் ஆகியவை மிகவும் வெற்றிகரமாக பரப்பபட்டுள்ளன.

அதே நேரம், சில தமிழ்த் திரைப்படங்கள், உண்மையான தமிழர் வாழ்க்கையை காட்டாது, மாயத் தோற்றக் கதைக் களங்களில் இயங்குவதால், தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்கள், பிற மொழி மற்றும் நாட்டவர் தமிழர்கள் குறித்த பிழையான புரிதலைப் பெறவும் வழிவகுக்கிறது. இதன் காரணமாகவும், தமிழ்த் திரைப்படத்துறை தரும் பெரும் வீச்சு காரணமாகவும், பல்வேறு அமைப்புகளும் தமிழ்த் திரைப்படத் துறையின் மீது தங்கள் கட்டுப்பாட்டைக் கொண்டு வர முயல்கின்றனர்.

பிற கலைத்துறைகளைப் போலவே, தமிழ்த் திரைப்படத் துறையினரின் புகழ் வெளிச்சமும் மிகையான ஒன்று.  அதே நேரம் இந்தி பேசப்படாத நாடுகளில் கூட பாலிவுட் நடிகர்களின் தாக்கம் இருக்கையில், இந்திய மாநிலமான, தமிழ்நாட்டில் பாலிவுட்டின் தாக்கம் ஏறக்குறைய இல்லாமலேயே இருப்பது, தனித்தியங்கும் தமிழ்த் திரைப்படத் துறையின் பரப்பை விளங்கிக் கொள்ள உதவும்.

தமிழ்த் திரைப்படத்துறை, அதன் தனிப்பெரும் வளர்ச்சியில், உலகத்தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. தமிழ்த் திரைப்படங்கள்,   தமிழ் கூறும் நல்லுலகின் சிறப்புகளாகிய இலக்கியங்கள்,பண்பாடு, பழக்கவழக்கங்கள், நாட்டுப்புறக்கலைகள் போன்ற பலவற்றை உள்ளடக்கிப் படமாக்கப்பட்டு உலகமெங்கும் தமிழரின் சிறப்புகளை பரவ செய்கின்றன.  அதோடு பற்பல வித்தியாசமான முன்னெடுப்புகளையும்,புதுப்புது முயற்சிகளையும் தமிழ்த் திரைப்படத்துறை ஊக்குவிக்கிறது‌. இதனால்  தமிழ் திரைப்படத்துறை , திரைப்பட உலகில் என்றும் வெற்றிநடை போட்டுப் பயணிக்கிறது.

பொறி கற்றல்

‌’நாங்கள்‌ ‌தரவுகளிற்குள்‌ ‌மூழ்கிக்‌ ‌கொண்டு‌ ‌அறிவுக்காகப்‌ ‌பட்டினி‌ ‌கிடக்கின்றோம்’-

ஜான்‌ ‌நாஜ்ஸ்பிட்‌ ‌

மிக‌ ‌வேகமாக‌ ‌இலத்திரனியல்‌ ‌மயமாகி‌ ‌வரும்‌ ‌இன்றைய‌ ‌உலகில்‌ ‌பொறி‌ ‌கற்றல்‌ ‌தொழில்‌ ‌நுட்பமானது‌ ‌மிகுந்த‌ ‌செல்வாக்கு‌ ‌மிக்கதும்‌ ‌சக்தி‌ ‌வாய்ந்த‌ ‌துறையாகவும்‌ ‌இருந்து‌ ‌வருகின்றது.‌ ‌நீங்கள்‌ ‌தொழில்‌ ‌நுட்பம்‌ ‌சார்ந்த‌ ‌நபராகவோ‌ ‌அல்லது‌ ‌சாராதவராகவோ‌ ‌‌இருப்பினும்‌,‌ ‌பொறி‌ ‌கற்றல்‌ ‌என்ற‌ ‌வார்த்தையை‌ ‌சமீப‌ ‌காலமாக‌ ‌அதிகமாக‌க்‌‌ ‌‌கேள்வியுற்று‌‌ ‌இருப்பீர்கள்.நாம்‌ ‌அனைவரும்‌ ‌நம்மை‌ ‌அறிந்தோ‌ ‌அறியாமலோ‌ ‌நாள்தோறும்‌ ‌பொறி‌ ‌கற்றல்‌ ‌தொழில்‌ ‌நுட்பத்தைப்‌ ‌பயன்படுத்துபவராகவே‌ ‌இருந்து‌ ‌வருகின்றோம்.ஒவ்வொரு‌ ‌தடவையும்‌ ‌வலையொளியினுள்‌ ‌நுழையும்‌ ‌போது‌ ‌உங்களுக்கு‌ ‌காண்பிக்கப்படும்‌ ‌காணொளிகளின்‌ ‌தெரிவின்‌ ‌பின்னுக்கும்‌,‌‌ ‌ஒவ்வொரு‌ ‌முறையும்‌ ‌கூகுளில்‌ ‌தேடலை‌ ‌மேற்கொள்ளும்‌ ‌போது‌ ‌உங்களுக்கு‌ ‌காண்பிக்கப்படும்‌ ‌முடிவுகளின்‌ ‌‌பின்னாலும்‌,‌ ‌உங்கள்‌ ‌மின்னஞ்சலின்‌ ‌வேண்டாத‌ ‌மின்னஞ்சல்களினை‌ ‌வகைப்படுத்துவதன்‌ ‌பின்னாலும்‌ ‌இயங்கிக்‌ ‌கொண்டிருப்பது‌ ‌பொறி‌ ‌கற்றல்‌ ‌வழிமுறைகளே‌ ‌ஆகும்.‌ ‌

கோவிட்-19‌ ‌நவம்பர்‌ ‌மாதத்தின்‌ ‌நடுப்பகுதியில்‌ ‌அதியுயர்‌ ‌எண்ணிக்கையை‌ ‌அடையலாம்.‌ ‌‌பிப்ரவரி‌‌ ‌மாதமளவில்‌ ‌இந்தியா‌ ‌தினந்தோறும்‌ ‌இரண்டரை‌ ‌லட்சம்‌ ‌கோவிட்-19‌ ‌நோயாளர்களை‌ ‌பதிவு‌ ‌செய்யலாம்.‌ ‌2100‌ ‌அளவில்‌ ‌உலக‌ ‌மக்கள்‌ ‌தொகை‌ ‌பல‌ ‌மடங்கு‌ ‌வீழ்ச்சியடையலாம்.இது‌ ‌போன்ற‌ ‌பலம்‌ ‌வாய்ந்த‌ ‌ஊகிப்புகளை‌ ‌அண்மைக்காலமாக‌ ‌பத்திரிகைகளின்‌ ‌முதல்‌ ‌பக்கத்திலும்‌ ‌இணையப்‌ ‌பக்கங்களில்‌‌ ‌‌சிறப்புச்‌‌ ‌செய்திகளாகவும்‌ ‌வாசித்திருப்பீர்கள்.‌ ‌இவற்றின்‌ ‌பின்னாலும்‌ ‌முக்கிய‌ ‌கணி்ப்புக்களை‌ ‌மேற்கொள்வதும்‌ ‌பொறி‌ ‌கற்றல்‌ ‌தொழி‌ல்நு‌ட்பமேயாகும்.‌ ‌

கடந்த‌ ‌சில‌ ‌தசாப்தங்களாக‌ ‌இணையப்‌ ‌பாவனையாளர்களின்‌ ‌எண்ணிக்கை‌ ‌பல்லாயிரம்‌ ‌மடங்காக‌ ‌அதிகரித்து‌ ‌வரும்‌ ‌நிலையில்‌,‌‌ ‌அதன்‌ ‌விளைவாக‌ ‌உருவாகும்‌ ‌தரவுகளின்‌ ‌அளவும்‌ ‌பல‌ ‌‌கோடி‌ளாக‌ ‌அதிகரித்துள்ளது.‌ ‌‌இந்தத்‌‌ ‌தரவுகளின்‌ ‌பின்னால்‌ ‌உள்ள‌ ‌வடிவங்களை‌ ‌ஆராய்ந்து‌ ‌அதற்கேற்றவாறு‌ ‌முடிவுகளை‌ ‌எடுத்தலே‌ ‌வினைத்திறன்‌ ‌மிக்க‌ ‌செயற்பாடாகும்.‌ ‌‌அதற்கேற்றாற்‌‌ ‌போல்‌ ‌நம்மிடமுள்ள‌ ‌தரவுகளை‌ ‌இயந்திரத்திற்குப்‌ ‌பயிற்றுவிப்பதன்‌ ‌மூலம்‌ ‌‌இயந்திரமானது‌‌ ‌எதிர்காலத்தில்‌ ‌எவ்வாறான‌ ‌விளைவுகள்‌ ‌கிடைக்கும்‌ ‌என்று‌ ‌சுயமாக‌ ‌தீர்மானிக்கக்‌ ‌கூடியதாகின்றது.‌ ‌இதுவே‌ ‌பொறி‌ ‌கற்றல்‌ ‌தொழி‌ல்நு‌ட்ப‌ ‌வழிமுறைகளின்‌ ‌பிரதான‌ ‌செயற்பாடு‌ ‌ஆகும்.‌ ‌ ‌

பொறி‌ ‌கற்றல்‌ ‌வழிமுறை‌யா‌னது‌ ‌பல்வேறு‌ ‌படிமுறைகளின்‌ ‌அடிப்படையிலேயே‌ ‌மாதிரி‌ ‌ஒன்றின்‌ ‌மீது‌ ‌பிரயோகிக்கப்படுகின்றது.முதலாவதாகப்‌ ‌பல்வேறு‌ ‌மூலங்களிலிருந்தும்‌ ‌தரவுகள்‌ ‌சேகரிக்கப்படும்.‌ ‌அடுத்து‌ ‌பொருத்தமான‌ ‌விதத்தில்‌ ‌தரவுகள்‌ ‌தயார்‌ ‌செய்யப்படும்.‌ ‌உதாரணமாக‌ ‌சில‌ ‌தரவுத்‌ ‌தொகுதிகள்‌ ‌முழுமையானதாக‌ ‌இருக்காத‌ ‌சந்தர்ப்பங்களில்‌ ‌அத்‌ ‌தரவுத்‌ ‌தொகுதிகளை‌ ‌நீக்க‌ ‌வேண்டும்‌ ‌அல்லது‌ ‌உரிய‌ ‌வழிவகைகளை‌ ‌செய்தல்‌ ‌வேண்டும்.‌ ‌பின்னர்‌ ‌குறித்த‌ ‌தரவுகளைப்‌ ‌பயன்படுத்தி‌ ‌சரியான‌ ‌வருவிளைவுகளைப்‌ ‌பெறுவதற்கு‌ ‌ஏற்ற‌ ‌பொறி‌ ‌கற்றல்‌ ‌வழிமுறை‌ ‌தெரிவு‌ ‌செய்யப்படும்.‌ ‌தெரிவு‌ ‌செய்யப்பட்ட‌ ‌வழிமுறையைப்‌ ‌பயன்படுத்தி‌ ‌பொறி‌ ‌கற்றல்‌ ‌மாதிரி‌ ‌ஆனது‌ ‌பயிற்றுவிக்கப்படும்.பயிற்றுவிக்கப்பட்ட‌ ‌மாதிரியானது‌ ‌சரியான‌ ‌விளைவைத்‌ ‌தருகின்றாதா‌ ‌எனப்‌ ‌பரிசோதிக்கப்படும்.‌ ‌விளைவின்‌ ‌செம்மை‌ ‌குறைவாக‌ ‌இருப்பின்‌ ‌மாதிரியானது‌ ‌மீண்டும்‌ ‌பயிற்றுவிக்கப்படும்.‌ ‌விளைவு‌ ‌உயர்ந்தபட்ச‌ ‌செம்மையுடையதாக‌ ‌இருப்பின்‌ ‌மாதிரியைப்‌ ‌பயன்படுத்தி‌ ‌எதிர்வுகூறல்களை‌ ‌மேற்கொள்ள‌ ‌முடியும்.‌ ‌ ‌ ‌ ‌ ‌

 படிமுறைகள்‌ ‌ ‌

 ‌ 

எடுத்துக்காட்டாக‌ ‌சென்னை‌ ‌நகரில்‌ ‌உள்ள‌ ‌வீடு‌ ‌ஒன்றின்‌ ‌சராசரி‌ ‌விற்பனை‌ ‌‌விலையைத்‌‌ ‌தீர்மானித்தல்‌ ‌தொடர்பான‌ ‌ஒரு‌ ‌பொறி‌ ‌கற்றல்‌ ‌மாதிரியை‌ ‌கருதுங்கள்.‌ ‌நகரிலுள்ள‌ ‌வீடு‌ ‌ஒன்றின்‌ ‌விற்பனை‌ ‌விலையை‌த்‌ ‌தீர்மானிப்பவையாக‌‌ ‌வீட்டின்‌ ‌அமைவிடம்,வீட்டிலுள்ள‌ ‌அறைகளின்‌ ‌எண்ணிக்கை,குடிநீர்‌ ‌வசதி,படுக்கை‌ ‌அறைகளின்‌ ‌எண்ணிக்கை,சராசரி‌ ‌வருவாய்‌ ‌போன்ற‌ ‌பல்வேறு‌ ‌‌காரணிகளினைக்‌‌ ‌கருதலாம்.‌ ‌எனவே‌ ‌முதலில்‌ ‌மேற்படி‌ ‌அம்சங்கள்‌ ‌உள்ளடங்கலாக‌ ‌தரவுகள்‌ ‌சேகரிக்கப்படும்.பின்னர்‌ ‌சேகரிக்கப்பட்ட‌ ‌‌தரவுகளைப்‌‌ ‌பொறி‌ ‌கற்றல்‌ ‌மாதிரிக்கு‌ ‌பயிற்றுவித்து‌ ‌பின்னர்‌ ‌மாதிரி‌ ‌பரிசோதிக்கப்படும்.‌ ‌இப்போது‌ ‌புதிதாக‌ ‌ஒரு‌ ‌வீட்டின்‌ ‌அம்சங்கள்‌ ‌தொடர்பான‌ ‌தரவுகளை‌ ‌மாதிரியினுள்‌ ‌உள்ளீடு‌ ‌செய்யும்‌ ‌போது‌ ‌மாதிரியானது‌ ‌அந்த‌ ‌வீட்டின்‌ ‌சராசரி‌ ‌விலையை‌ ‌ஊகிக்கக்‌ ‌கூடியதாக‌ ‌இருக்கும்.‌ ‌‌

பொறி‌‌ ‌‌கற்றல்‌ ‌தொழில்நுட்பமானது‌‌ ‌பல்வேறு‌ ‌முறைகளில்‌ ‌அணுகப்படுகின்றது.அவற்றை‌ ‌பிரதானமாக‌ ‌மேற்பார்வை‌ ‌செய்யப்பட்ட‌ ‌கற்கை,மேற்பார்வை‌ ‌செய்யப்படாத‌ ‌கற்கை,அரை‌ ‌மேற்பார்வை‌ ‌செய்யப்பட்ட‌ ‌கற்கை‌ ‌மற்றும்‌ ‌வலுவூட்டப்பட்ட‌ ‌கற்கை‌ ‌என‌ ‌வகைப்படுத்தலாம்.‌ ‌

மேற்பார்வை‌ ‌செய்யப்பட்ட‌ ‌கற்கை‌ ‌எனப்படுவது‌ ‌மாதிரியைப்‌ ‌பயிற்றுவிக்கும்‌ ‌தரவானது‌ ‌,‌ ‌அனைத்து‌ ‌அம்சங்களையும்‌ ‌கொண்டிருக்கும்‌ ‌அதேவேளை‌ ‌அதற்கொத்த‌ ‌ஊகிக்கும்‌ ‌தீர்வினையும்‌ ‌உள்ளடக்கியதாகவே‌ ‌இருக்கும்.உதாரணமாக‌ ‌மேற்குறிப்பிட்ட‌ ‌எடுத்துக்காட்டில்‌ ‌மாதிரியை‌ ‌பயிற்றுவிக்கும்‌ ‌தரவானது‌ ‌வீட்டின்‌ ‌அமைவிடம்,‌ ‌அறைகளின்‌ ‌எண்ணிக்கை,குடிநீர்‌ ‌வசதி,படுக்கை‌ ‌அறைகளின்‌ ‌எண்ணிக்கை‌ ‌மற்றும்‌ ‌சராசரி‌ ‌வருவாய்‌ ‌போன்ற‌ ‌தரவுகளை‌ ‌உள்ளடக்கியதாக‌ ‌இருக்கும்‌ ‌அதே‌ ‌வேளை‌ ‌அதற்கொத்த‌ ‌வீட்டின்‌ ‌சராசரி‌ ‌விலையையும்‌ ‌உள்ளடக்கி‌ ‌இருக்கும்.‌ ‌ ‌

மேற்பார்வை‌ ‌செய்யப்படாத‌ ‌கற்கையில்‌ ‌தீர்வு/வருவிளைவு‌ ‌ஆனது‌ ‌பயிற்றுவிக்கும்‌ ‌தரவுத்‌ ‌தொகுதியில்‌ ‌உள்ளடக்கப்படாது‌ ‌இருக்கும்.‌ ‌இந்த‌ ‌வகை‌ ‌கற்கையின்‌ ‌போது‌ ‌பொறியானது‌ ‌பயிற்றுவிக்கப்பட்ட‌ ‌தரவுகளிலிருந்து‌ ‌சுயாதீனமாக‌ ‌கற்றுக்‌ ‌கொள்ளுகின்றது.‌ ‌உதாரணமாக‌ ‌நீங்கள்‌ ‌ஒரு‌ ‌காணொளியை‌ ‌வலையொளி‌ ‌தளத்தில்‌ ‌தரவேற்றம்‌ ‌செய்கின்றீர்கள்.‌ ‌உங்கள்‌ ‌காணொளியைப்‌ ‌பார்வையிட்டவர்கள்‌ ‌தொடர்பாக‌ ‌தரவினை‌ ‌ஒரு‌ ‌பொறி‌ ‌கற்றல்‌ ‌மாதிரிக்கு‌ ‌பார்வையாளர்களுக்கிடையிலான‌ ‌தொடர்பை‌ ‌பெறும்‌ ‌நோக்கத்துடன்‌ ‌பயிற்றுவிக்கிறீர்கள்‌ ‌என‌ ‌கருதுங்கள்.‌ ‌இதன்‌ ‌மூலம்‌ ‌உங்கள்‌ ‌மாதிரியானது‌ ‌பார்வையாளர்களுக்கிடையிலான‌ ‌தொடர்பை‌ ‌விளைவாகத்‌ ‌தரும்.‌ ‌உங்களுடைய‌ ‌காணொளியை‌ ‌பார்வையிட்டோரில்‌ ‌60‌ ‌விழுக்காடு‌ ‌பேர்‌ ‌20-28‌ ‌வயதுக்குட்பட்டவர்களாகவும்‌ ‌தமிழ்நாட்டைச்‌ ‌சேர்ந்தவர்களாகவும்‌ ‌மாலை‌ ‌வேளையிலேயே‌ ‌உங்கள்‌ ‌காணொளியைப்‌ ‌பார்வையிடுபவராகவும்‌ ‌காணப்படுவதாக‌ ‌விளைவைத்‌ ‌தருகின்றதாயின்‌ ‌உங்களுடைய‌ ‌எதிர்கால‌ ‌காணொளிகளை‌ ‌குறித்த‌ ‌பார்வையாளர்களை‌ ‌இலக்காகக்‌ ‌கொண்டு‌ ‌பதிவிடுவதன்‌ ‌மூலம்‌ ‌அதிக‌ ‌பார்வையாளர்களைப்‌ ‌பெற்றுக்கொள்ளக்‌ ‌கூடியதாயிருக்கும்.‌ ‌ ‌

வலுவூட்டப்பட்ட‌ ‌கற்கை‌ ‌எனப்படுவது‌ ‌சிறிது‌ ‌சிக்கல்‌ ‌நிறைந்த‌ ‌கற்றல்‌ ‌முறையாகும்.மனித‌ ‌இயந்திரத்திற்கு‌ ‌நிற்றல்,நடத்தல்‌ ‌போன்ற‌ ‌செயற்பாடுகளை‌ ‌கற்பிப்பதற்கு‌ ‌இந்த‌ ‌முறை‌ ‌பயன்படுகின்றது.அரை‌ ‌மேற்பார்வை‌ ‌செய்யப்பட்ட‌ ‌கற்கை‌ ‌முறையில்‌ ‌பயிற்றுவிக்கும்‌ ‌தரவுத்‌ ‌தொகுதியானது‌ ‌தீர்வுள்ள‌ ‌தரவுகளையும்‌ ‌கொண்டிருக்கும்‌ ‌அதேவேளை‌ ‌தீர்வற்ற‌ ‌தரவுகளையும்‌ ‌கொண்டிருக்கும்.‌ ‌

நமக்கு‌ ‌கிடைக்கும்‌ ‌வருவிளைவை‌ ‌அடிப்படையாகக்‌ ‌கொண்டு‌ ‌வகைப்படுத்தல்,கொத்தாக்கல்‌ ‌மற்றும்‌ ‌சல்பலனாக்கம்‌ ‌என்றவாறு‌ ‌பொறி‌ ‌கற்றல்‌ ‌வழிமுறைகளை‌ ‌வகைப்படுத்தலாம்.‌ ‌தீர்வானது‌ ‌தனித்தனி‌ ‌பெறுமானங்களைக்‌ ‌கொண்டிருக்குமாயின்(உண்மை/பொய்,0/1)‌ ‌இது‌ ‌வகைப்படுத்தல்‌ ‌வழிவகையாகும்.‌ ‌’மின்னஞ்சல்‌ ‌ஆனது‌ ‌ஸ்பாம்‌ ‌அல்லது‌ ‌ஸ்பாம்‌ ‌அல்ல’‌ ‌இது‌ ‌வகைப்படுத்தல்‌ ‌வழிவகைக்கு‌ ‌மிக‌ ‌சிறந்த‌ ‌எடுத்துக்காட்டாகும்.‌ ‌மேலே‌ ‌குறிப்பிட்ட‌ ‌வலையொளி‌ ‌எடுத்துக்காட்டு‌ ‌ஆனது‌ ‌கொத்தாக்கல்‌ ‌வழிவகையினை‌ ‌சேர்ந்ததாகும்.பங்குச்‌ ‌சந்தை‌ ‌நிலவரம்‌ ‌சல்பலனாக்க‌ ‌வழிவகையினை‌ ‌சேர்ந்ததாகும்.‌ ‌இங்கே‌ ‌வருவிளைவுகள்‌ ‌தொடர்ச்சியான‌ ‌எண்களாக‌ ‌அமையும்.‌ ‌

விவசாயம்,வியாபாரம்,சுகாதாரம்‌ ‌என்றவாறு‌ ‌பொறி‌ ‌கற்கையின்‌ ‌பயன்பாடுகள்‌‌ ‌பரந்து‌ ‌விரிந்தவை.குறிப்பிட்ட‌ ‌நோய்‌ ‌அறிகுறிகளைக்‌ ‌கொண்டு‌ ‌பொறி‌ ‌கற்கையின்‌ ‌மூலம்‌ ‌நோயினை‌ ‌இனங்கண்டு‌ ‌கொள்ளலாம்.‌ ‌பொறி‌ ‌கற்கையின்‌ ‌மூலம்‌ ‌பங்குச்‌ ‌சந்தை‌ ‌விலை‌ ‌நிலவரங்களை‌ ‌ஊகித்துக்‌ ‌கொண்டு‌ ‌‌அதற்கேற்றாற்‌‌ ‌போல்‌ ‌நம்‌ ‌பங்குகளை‌க்‌ ‌கையாள‌‌ ‌முடியும்.உலகின்‌ ‌பொருளாதாரத்தின்‌ ‌பெரும்‌ ‌பங்கினை‌ ‌விவசாயமே‌ ‌நிர்ணயிக்கின்றது.‌ ‌பொறி‌ ‌கற்கை‌ ‌வழிவகைகள்‌ ‌ஆனவை‌ ‌விவசாயத்‌ ‌துறையில்‌ ‌மாபெரும்‌ ‌‌புரட்‌சியை‌ ‌ஆற்றி‌ ‌வருகின்றது‌ ‌என்றால்‌ ‌மிகையன்று.‌ ‌பொறி‌ ‌கற்கை‌யினை‌ப்‌ ‌பயன்படுத்தி‌க்‌‌ ‌‌காலநிலை‌,தாவரத்தின்‌ ‌தன்மை‌ ‌என்பவற்றை‌ ‌எதிர்வு‌ ‌கூற‌ ‌முடியும்.‌ ‌எனவே‌ ‌காலநிலை‌ ‌எதிர்வு‌ ‌கூறல்‌ ‌மற்றும்‌ ‌அதனுடன்‌ ‌தொடர்‌புபட்‌ட‌ ‌மண்ணின்‌ ‌தன்மை‌ ‌என்பவற்றை‌ ‌கருத்தில்‌ ‌கொண்டு‌ ‌வினைத்திறன்‌ ‌மிக்க‌ ‌விவசாயத்தினை‌ ‌மேற்கொள்ள‌ ‌முடியும்.‌ ‌அடுத்து‌ ‌வரும்‌ ‌தசாப்தத்தினுள்‌ ‌பொறிகற்கை‌ ‌உலகில்‌ ‌ஏற்படுத்தப்‌ ‌போகும்‌ ‌மாற்றங்கள்‌ ‌எண்ணிலடங்காதவை.நாமும்‌ ‌உலக‌ ‌மாற்றத்திற்கேற்றவாறு‌ ‌வேகநடை‌ ‌போடுவதற்கு‌ ‌பொறிகற்கை‌ ‌தொடர்பான‌ ‌அறிவைப்‌ ‌பெற்றிருத்தல்‌ ‌சிறந்ததாகும்.‌

 ‌*****************************‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌

நவீன தமிழ்

தமிழ் மொழியானது, கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக பல்வேறு கோணங்களில் பரிணாம வளர்ச்சியினைக்  கண்டுள்ளது. சங்ககால இலக்கியங்கள் முதல் இன்றைய புதினங்கள் வரை, எண்ணற்ற களங்களில் தமிழின் பங்களிப்பு உள்ளது. இன்றைய தலைமுறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்க்கேற்ப, இன்றைய தமிழ் இலக்கியங்கள் பலவகையில் மாற்றமடைந்துள்ளன, எடுத்துக்காட்டுகளாக  புதினம், துளிப்பாக்கள்(ஹைக்கூ கவிதைகள்), வரலாற்று நாவல்கள், பயணக்கட்டுரைகள், அறிவியல் புனைகதைகள், சிறார் நாவல்கள் முதலியவற்றைச் சொல்லலாம். நவீன  தமிழ் இலக்கிய வரலாற்றில், வரலாற்றுப் புதினங்கள் மற்றும் சிறார் புதினங்களின் பங்களிப்பினைச் சுருக்கமாகக்  காண்போம்.

வரலாற்றுப் புதினங்கள்:

1940களில், அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம், நாம் இன்று காணும் வரலாற்றுப் புதினங்களின் தொடக்கமாய் அமைந்தது. மேலும், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் என கல்கியின் படைப்புகள் நம்மிடையே புதினங்களின் வழி வரலாற்றினை அறியும்  ஆவலினை ஏற்படுத்தின. சோழ மன்னன் பார்த்திபனின் கனவு தொடங்கி, நரசிம்ம பல்லவனின் வாதாபி பயணமும், மல்லை சிறப்பங்களும் படிப்பவரின் கண் முன்னே வந்து நின்றன .

ராஜா ராஜ சோழனின் கடற்படையும், பண்டைய தஞ்சையின் பெருவுடையார் கோவிலும் நம்மை நேரில் அழைத்தன.  அமரர் கல்கியின் வழியில் வந்த பிற்கால எழுத்தாளர்கள், இவ்வகை புதினங்களை மேலும் சிறப்படையச் செய்தனர். விக்ரமனின் நந்திபுரத்து நாயகி, 1960களில் வெளிவந்த சாண்டில்யனின்  யவன ராணி, கடல் புறா போன்றவை, மக்களிடையே வரலாற்றினைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தினை மேலும் அதிகப்படுத்தின.

வரலாற்று நாவல்களின் புதியதொரு பரிணாமமாய் ஜூனியர் விகடனில் தொடராய் வெளிவந்த ‘வந்தார்கள் வென்றார்கள்‘, நம் இந்தியாவின் சமீபத்திய வரலாற்றினை மேலும் மக்கள் அறியும் வகையில் அமைந்தது. 1994 ஆம் ஆண்டு ஒரு முழு தொகுப்பாய் வெளிவந்த இந்நூல், பல்வேறு தரப்பு மக்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. நம் பாரதத்தை நோக்கிய தைமூரின் பேராசையும், அதே பாரத்தினை அன்பாலும் பண்பாலும், கலாச்சார ஒற்றுமையினாலும் வழிநடத்திய அக்பரின் ஆட்சியில் நாம் இருக்கவிலையே என்ற ஏக்கத்தினை நம்மிடையே தோற்றுவிக்கும் வகையில் அமைந்தது இந்நூல். மேலும் ஆன்மிக நிகழ்வுகளின் அடிப்படையினைக் கொண்டு திரு வேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலா மற்றும் பல நூல்கள் , பண்டைய தமிழகத்தில் ஆன்மிகத்தின் பங்கையும், ஆன்மிகத்தில் தமிழ் கண்ட வளர்ச்சியையும் எடுத்துரைத்தன. நம் தசாப்தத்தின் பங்களிப்பாய், திரு சு. வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நூல், இன்றைய இளம் தலைமுறையினர், தங்கள் வரலாற்றினை மேலும் அறிந்துகொள்ளவும், தங்கள் குடியின் பண்டைய சிறப்புகளை அறிந்துகொள்ளவும் பேருதவியாக அமைந்தது. கபிலரின் காலந்தொட்டே மொழி அறிந்த மாந்தரை வணங்கும்  பண்பும், நம் பண்டைய வீரக்கலைகளான சிலம்பும், அடிமுறையும் , எவ்வித நோயினையும் குணப்படும் சித்த  வைத்திய முறைகளையும் நம் கண் முன்னே கொண்டுவருவது இந்நூலின் சிறப்பு. பள்ளி மாணவர்கள் முதல் பெரியோர் வரை நம் வரலாற்றினை அறிந்துகொள்ள வேண்டும் என்பதை இந்நூல்களின் ஆசிரியர்களும், தமிழ் ஆர்வலர்களும் நமக்கு கூறும் அறிவுரை என்பதாக உணர்ந்துகொள்ளுதல் தகும். 

சிறார் நாவல்கள் :

நம் பள்ளிப் பருவத்தில், செய்தித்தாளில் வந்த அம்புலி மாமா சித்திரக் கதையினை நாம் மறந்திருக்க மாட்டோம். நாம் பள்ளியில் பேசி மகிழ்ந்த கதைகளின் எண்ணிக்கை கணக்கரிய முடியாதது. அவ்வரிசையில் இன்றைய இளம் பிள்ளைகள் படிக்கும் வகையில் எண்ணற்ற சிறார் நாவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய், ஜெயமோகனின் எழுத்தில் வெளிவந்த பனிமனிதன், வெள்ளி நிலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.இவை நற்கருத்துகளுடன், அறிவியலையும் எளிய நடையில் விளக்குகின்றன. வட மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பூர்வீக குடிகள் மற்றும் அவர்களின் உணவு முறைகளையும் நாம் அறியலாம். சார்லஸ் டார்வின் அன்று கூறிய பரிணாமக்  கொள்கையினை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்குவது டாக்டர் திவாகர்  கதாபாத்திரத்தின் சிறப்பு. வெள்ளி நிலத்தில் உடன் வரும் நோர்பா மற்றும் டாக்டர்.நரேந்திர பிஸ்வாலில் கதாபாத்திரங்கள், இன்றைய தொழில்நுட்பங்களை எளிமையாக பரிமாறிக்கொள்வது சிறார்களுக்கு ஆர்வத்தைஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்திய கலாச்சாரத்தை எளிமையான நடையிலும், நாம் அன்றாடம் பின்பற்றும் உணவு முறைகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களின் தோற்றத்தையும் பழக்க வழக்கங்களில் இருக்கும் அறிவியலை சிறார்களின் பார்வையில் விலகும் டாக்டர் நரேந்திர பிஸ்வாலின் கதாபாத்திரம், நம்முடன் ஒரு ஆசிரியர் இருப்பதுபோல் உணரச்செய்கிறது. கேப்டன் பாண்டியன் மற்றும் குழுவினர் செல்லும் சாகச பயணங்கள் படிக்கும் அனைவர்க்கும் தீராத ஆர்வத்தினை தூண்டுகின்றன. நம் நாட்டின்  நிலப்பரப்பையும் கண் முன்னே கொண்டு வரும் ஹெலிகாப்டர் பயணமும், மக்களின் பன்முகத்தன்மையை அறிய இந்நூலினை கையேடாக கொள்ளலாம் என்றால் மிகையாகாது. இவ்வாறு எண்ணற்ற சிறப்பான சிறார் புதினங்கள் தமிழில் வெளிவருகின்றன. குழந்தைகளிடம்,மாணவர்களிடம் சிறு வயதிலிருந்தே வாசிப்புப் பழக்கத்தினை வளர்த்தெடுப்பதில் இத்தகைய சிறார் புதினங்கள் பெரும்பங்காற்றுகின்றன.

-நந்தகிஷோர்

நட்பிற்க்கோர் சமர்ப்பணம்

நட்பே…..

நீ   என் வாழ்வின் வசந்தகாலம்

பல நேரங்களில் , உன் நேசத்தில் நெகிழ்ததுண்டு

உன் பேச்சில் நான் மகிழ்ந்ததுண்டு

நான் துவண்டு போகும் நேரத்தில் எல்லாம் நீயே எந்தன் ஊன்றுகோல்

பல தேசம் சுற்றித் திரிந்தும் , நம் நட்பு எனக்கு சலிக்கவில்லை – ஆழம் அப்படி

எதற்கும் நான் அஞ்சியதில்லை – மரணம் உட்பட

நீ  தோள் கொடுப்பாய் என்பதால்…

என்றென்றும் நம் நட்பு சுடர் விடட்டும், மறையாச் சூரியனாய்

 

என்றும் அன்புடன் ,

ஹ.கார்த்திகேயன்

 

மறுவீடு

மறுவீடு – முதலில் இந்த பதத்தின் பொருளை ஆராய்வோம் . மறுவீடு என்பது திருமணத்திற்குப் பின் மணமக்களுக்கு பெண்வீட்டார் அளிக்கும் விருந்தினைக் குறிக்கலாம். சற்று வேறு விதமாக இச்சொல்லை அணுகினால் இதை “மற்றோரு வீடு” என்றும் பொருள்கொள்ள முடியும்.

முதலில் பொதுப்பொருளை ஆராய்வோம்.மறுவீடு என்னும் சடங்கு பழந்தமிழர் மரபில் ஓர் அங்கமாகத் திகழ்கிறது. இந்தச் சடங்கு ஏன் நடத்தப்படுகிறது என்று பார்த்தோமேயானால், மாப்பிள்ளைக்கு பெண்வீட்டாரோடு நன்கு பழக ஒரு வாய்ப்பாக இந்நிகழ்வு திகழ்கிறது. மேலும், இந்நிகழ்வு அந்த மணப்பெண்ணின் பயத்தையும் பதற்றத்தையும் குறைக்க உதவலாம். ஏனெனில் , மணப்பெண்ணானவள் இந்நிகழ்வின் போது தான் திருமணத்திற்குப் பின் முதல்முறையாகத் தன் அகத்திற்கு வருகிறாள்.இது கண்டிப்பாக அவளுக்கு ஒரு ஆறுதலாய் அமையும். இதுவரை நாம் இச்சடங்கைப் பற்றி சிந்தித்தோம் . இப்பொழுது இரண்டாம் பொருளையும் ஆராய்வோம் .

ஏற்கனவே மறுவீடு என்றால் மற்றோரு வீடு என்றும் கொள்ளலாம் என்று கூறியிருந்தேன் அல்லவா , அப்படியென்றால் என்ன ? என்பதை உற்று நோக்குவோம். ஒரு மனிதனுக்குத் தான் பணிபுரியும் இடமோ, படிக்கும் கல்லூரியோ மற்றோரு வீடாக அமைகிறது . ஏனெனில் , அவன் தான் விழித்திருக்கும் பொழுதில் பாதிக்கு மேல் இங்கு தான் கழிக்கிறான். எனவே பணியிடத்தையும் நம் வீடு போல் பேண வேண்டும். அவ்வாறு பேணி வந்தால், அங்கிருப்போர் மகிழ்ச்சி அடைவர் , அதனால் நாம் அடையும் மகிழ்ச்சியோ மட்டற்றது . ஏனென்றால் , பிறர் சிரிப்பில் மகிழ்வதே உண்மையான மகிழ்ச்சியாகும் . எடுத்துக்காட்டாக , ஒரு நல்ல ஆசிரியர் தன் மாணவன் வெற்றிபெறும் போது அடையும் மகிழ்ச்சி மட்டற்றதாக இருக்கும். ஏனெனில் , அந்த ஆசிரியர் அப்பள்ளியைத் தன் அகமாகக் கருதி உழைத்ததும் மாணவனின் வெற்றிக்கு உதவியது. ஆக , நாமும் நம் பணியிடத்தை இல்லை இல்லை இவ்வுலகையே நம் மறுவீடாகக் கருதி இப்புவியையும் இச்சமுதாயத்தையும் பேணிக்காப்போமாக !

– ஹ. கார்த்திகேயன்