
கொரோனா காலம் திரைத் துறையினருக்கு சவாலாகவே அமைந்திருந்தது. அத்தகு சூழலிலும் திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்தது மாஸ்டர் திரைப்படம். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்களிப்பில் இருந்த அதன் எழுத்தாளர் திரு. இரத்னகுமார் அவர்கள், மன்றம் மக்களோடு மனம்விட்டு பேச தொடங்கினார்....
1.குழந்தைப் பருவம்தான் அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத பசுமைப் பருவம் என்று சொல்லலாம்; அவ்வளவு அற்புதமான நினைவுகள் அனைவரின் வாழ்க்கையிலும் நிச்சயம் இருக்கும். உங்களது குழந்தைப் பருவ நினைவுகள் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கண்டிப்பாக, எனக்குப் பார்த்தால் மூன்று வீடுகள் என்று சொல்வேன். முதலில் பிறந்து வளர்ந்த வீடு,பள்ளி மற்றும் பேருந்து. என் வாழ்க்கையில் நான் அதிக நேரம் செலவிட்ட இடங்களில் பேருந்தும் ஒன்று.கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பேருந்தில் பயணித்திருப்பேன்.நான் வளர்ந்த வீடு ஒரு 20 குடும்பங்கள் வசிக்கும் கூட்டுக் குடித்தனம் தான். அதனாலேயே என்னைவிட வயதில் சிறியவர்களுடனும் பெரியவர்களுடனும் நல்ல நட்பு இருந்தது. நாங்கள் பம்பரம் விட்டால் மற்ற அனைத்துக் குடித்தனக்காரர்களும் பம்பரம் விடுவார்கள்.நாங்கள் பட்டம் விட்டால் மற்றவர்களும் சேர்ந்து கொள்வார்கள். பள்ளி வாழ்க்கை என்று பார்த்தால் ஒரு சராசரி மாணவன் நான். புதுமையான படைப்புகளில் மட்டும் ஆர்வம்கொண்டவனாக இருந்தேன்.பள்ளியில் மேத்ஸ்-பயோ பிரிவு தான் எடுத்தேன். இருந்தாலும் போதுமான மதிப்பெண் இல்லாததால் டிப்ளமோ படித்து ஹெச்.சி.எல் இல் வேலைக்குச் சேர்ந்தேன். இயந்திரங்களோடு செய்யும் வேலை, மேலும் வெளி மாநிலச் சூழலும் சேராததால் வேலையை விட்டுவிட்டு, விஷுவல் கம்யூனிகேசன் முடித்தேன். பின்னர் குறும்படங்கள் இயக்கத் தொடங்கினேன்.
2.சிறு வயதில் இப்படித்தான் ஆக வேண்டும் என்று ஆசைகள் இருந்ததுண்டா? அது கைகூடியதா?
எனக்கு அப்படிப் பெரிய ஆசைகள் இருந்ததில்லை. நான் உயரம் குறைவானவனாகவே இருந்தேன். ஆசைகள் என்றால் உயரமாவது, தாடி மீசை வளர்வது, பைக் ஓட்டுவது போன்றவைதான் என் ஆசைகளாக இருந்தன. தந்தை தினமணியில் நிருபர்; மேலும் சிலம்பத்தை சினிமா மூலம் வளர்க்க முற்பட்டவர். நான் சிலம்பம் கற்க ஆசைப் பட்டேன். ஆனால், அதை நான் வாழ்க்கைத் தொழிலாக்க விரும்பவில்லை.
3.யாரும் நம்மிடம் நீ சினிமா இயக்குநராக வேண்டும், நீ நடிகராக வேண்டும் என்று சொல்வது பெரும்பாலும் அரிது. நமக்கே திரைப்படங்கள் பார்த்துத் தோன்றலாம், இல்லையெனில் யாரையாவது பார்த்துத் தோன்றி இருக்கலாம்.அப்படி உங்களுக்கும் சினிமாத்துறையில் சேர வேண்டும் என்று முதல்முறையாகத் தோன்றிய தருணம் பற்றியும், உங்கள் ரோல்மாடல் பற்றியும், இறுதியாக இனி நமக்கு சினிமா தான் வாழ்க்கை என்று முடிவெடுத்த தருணம் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்கள்?
எனது தந்தை சினிமா அறிமுகம் கொண்டவர், சினிமா, சிலம்பம், நிருபர் என பன்முகம் கொண்டவர். எனவே அவரிடமிருந்து தான் சினிமா ஆர்வம் வந்திருக்க வேண்டும். சினிமா சார்ந்த பேச்சு எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். அதுதான் என்னை சினிமாவைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது. சினிமாவைத் தேர்ந்தெடுத்த பின்தான் அதிகமாகப் படங்கள் பார்க்கத் தொடங்கினேன். அப்படி என்னை ஈர்த்தவர்களென மணிரத்னம், செல்வராகவன்,பாரதிராஜா போன்றோரைச் சொல்லலாம்.
4. திரைத்துறையில் குறிப்பாக ஏன் இயக்குநராக விரும்பினீர்கள்? கதாநாயகனாகவோ இசையமைப்பாளராகவோ வேண்டுமென்று தோன்றியதுண்டா?
ஒரு நடிகரால் நடிக்க மட்டுமே முடியும். அதுவும் குறிப்பிட்ட பாத்திரமாகத்தான் நடிக்க முடியும். ஆனால் ஒரு இயக்குநர் அனைத்துப் பாத்திரங்களிலும் நடிக்கிறார், கதை எழுதுகிறார், படத்தை இயங்க வைக்கிறார்; எனவே தான் இயக்குநராக விரும்பினேன். ஒரு படம் இயக்குகிறோமென்றால் அதில் பல யுக்திகளைச் சேர்த்து மெருகேற்றி, ஒரு குழந்தைபோல் பாவித்துக்கொள்ள இயக்குநரால் தான் முடியும்.எனவேதான் இயக்குநராக விரும்பினேன்.
5.அனைவருக்கும் இதயம் தொட்ட பாடல்களென்று ஒருசில பாடல்கள் கண்டிப்பாக இருக்கும். உங்களுக்கு மிகவும் பிடித்த 5 பாடல்கள் என்னென்ன மற்றும் நீங்கள் அந்தப் பாடல்களில் எதை ரசித்தீர்கள், ஏன் பிடித்தது?
உள்ளத்தில் நல்ல உள்ளம்
பெரும்பாலானோர் இதை ஒரு சோகப் பாடலாகவே பார்க்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு உத்வேகம் தரும் பாடல். நம்மை நாமே தியாகியாக உணர வைக்கும் பாடல்.
காதல் பாடல்களென்றால் “காதலெனும் தேர்வெழுதி” “வெண்ணிலவே வெண்ணிலவே “ போன்ற பாடல்கள் பிடிக்கும்.
சங்கமம் திரைப்படத்திலிருந்து “ஆலால கண்டா” பாடல் பிடிக்கும். தந்தை அன்பு சார்ந்த பாடலென்பதாலும், எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் பாடியதென்பதாலும் அது என்னை மெய் சிலிர்க்க வைத்த பாடல்.
மேலும் கில்லி “அர்ச்சுனரு வில்லு” போன்ற பாடல்களும் பிடிக்கும்.
6.நீங்கள் சினிமாவைத் தேர்ந்தெடுத்தபோது உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?
நான் சில காலத்திற்கு துணை இயக்குநராக இருந்ததையே குடும்பத்திடம் மறைத்திருந்தேன்.பின்னர் இதை நான் வீட்டினரிடம் சொல்லும்போது “இதைப்போய் ஏன் மறைத்தாய்?” என்றே கேட்டனர். அப்போதுதான் நான் என் தவற்றை உணர்ந்தேன். இருப்பினும் எதுவாக இருந்தாலும் திருமண வயதுக்குள் வைத்துக்கொள்ள அறிவுறுத்தினர். மேலும் குடும்பச்சுமை எனக்குத் தடையாகாமல் முழு ஒத்துழைப்பைத் தந்தனர்.
7.சினிமா தான் என்றானது முதல் துணை இயக்குநரானது வரை உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?அது பற்றிக் கூறுங்கள். எந்த இயக்குநரிடம் துணை இயக்குநர் ஆகவேண்டுமென்று நினைத்தீர்கள்? அந்த இயக்குநர்களை எப்படி அணுகினீர்கள்?
நான் செல்வராகவன், மணிரத்னம் இருவரிடமும் துணை இயக்குநராக விரும்பினேன்.வசந்தபாலன் அவர்களிடம் கூட வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அப்போது நான் முழுப்படத்தையும் எடுத்துவிடும் அனுபவத்தையும் “கருப்பம்பட்டி” திரைப்படம் மூலம் பெற்றிருந்ததால் படம் இயக்கத் தயாராகினேன்.அப்படத்தின் இயக்குநர் அஜ்மன் அவர்களை அணுகும்போது அதற்குமே முதலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அங்கேயே வேடிக்கை பார்ப்பதற்கு நின்றேன்.பின்னர் எனது ஆர்வத்தைக் கண்டு என்னைத் துணை இயக்குநராகச் சேர்த்துக் கொண்டார். பின்னர் படிப்படியாக படத்தின் முழு வேலைகளிலும் எனது பங்கைக் கொடுத்தேன்.
8.பொதுவாக பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி பற்றிய நிறைய கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இருக்கும்; ஆனால் அனுபவங்கள் எதிர்பாராததாகவே இருக்கும். அதுபோல நீங்கள் நினைத்தது போல் சினிமா உலகம் இருந்ததா ?
தமிழ் சினிமா இப்படித் தான் இருக்கும் என்று ஓரளவிற்குத் தெரிந்து வைத்திருந்தேன். துணை இயக்குநர்களைத், தனது வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்துவர் என்ற யூகம் இருக்கிறது. நான் இயக்குநராக வந்த சமயம், பல குறும்பட இயக்குநர்கள் வளர்ந்து வந்தனர். அவர்கள் திறமை மீது மரியாதை இருந்தது.இப்பொழுது அவர்களை மதிப்போடும் , மரியாதையோடும் இயக்குநர்கள் நடத்துகிறார்கள் ஆனால் எனக்கு இது போன்ற எந்த அனுபவமும் இல்லை என்பது எனது பாக்கியம். நாம் பொறுமையாக இருந்தால் நாம் நினைத்தது நடக்கும்.
9.உங்களுக்கு எந்தக் காலகட்டத்தில் படம் இயக்கலாம் என்று தோன்றியது அல்லது படம் செய்வதற்கு வாய்ப்பு தேடி வந்ததா ?
நான் ஒரு திரைக்கதையைப் பாதியில் எழுதிக் கொண்டிருந்தேன், அதை என் நண்பருக்கு அனுப்பி, அது அவருக்கு மிகவும் பிடித்துப் போகத் தான் செய்து கொண்டு இருந்த படத்தைப் பாதியில் விட்டு, மது என்ற குறும்படம் தயாரித்தோம். அதுவே பிறகு மேயாத மான் என்ற படமாக அமைந்தது. எனது எழுத்துத் திறமையில் நம்பிக்கை வைத்து எனது நண்பன் தான் பணியாற்றிக் கொண்டிருந்த படத்தை விட்டு என்னுடன் சேர்ந்தார். அது மட்டும் அல்லாமல் குறைந்த பொருட்செலவில் கதை நன்றாக அமைந்தால் மக்களை அந்தப் படம் சென்றடையும் என்று “நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்” என்ற படம் நிரூபித்தது. இதனால் நாங்கள் துணிந்து பட இயக்கத்தில் இறங்கினோம்.
10.உங்களது படங்களுக்கு நடிகர்களை எப்படித் தேர்வு செய்வீர்கள் ?
நான் கதை எழுதும்போது நடிகர்களைப் பற்றி பெரிதாகச் சிந்திப்பதில்லை, ஆனால் படம் ஆரம்பிக்கும் முன், நாம் நமக்கு தெரிந்தவர்கள் மூலம் படங்களில் நடித்தவர்கள் அல்லது நமக்கு தெரிந்தவர்களை அழைத்து ஆடிசன் செய்து பார்க்கலாம் அல்லது படத்திற்கு, இந்தக் கதாபாத்திரத்துக்கு நடிகர் தேவை என விளம்பரம் செய்த பிறகு தேர்வு செய்யலாம்.
11.உங்கள் முதல் படம் மேயாத மான் வெளியாகும் பொழுது உங்களுக்கு எப்படி இருந்தது மற்றும் மக்கள் எப்படி வரவேற்றனர் ?
படம் எடுப்பதில் பல கஷ்டங்கள் உள்ளன. நாங்கள் படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கஷ்டம் அனுபவித்தோம். மேயாத மான் படத்தில் கல்யாணக் காட்சி எடுக்கும்பொழுது பெரிய மண்டபம் கொடுத்தார்கள் ஆனால் அதற்கேற்ப மக்கள் இல்லை அதனால் நான் இந்த படத்தில் நடிக்கும் நடிகைக்கு இருக்கும் புகழை வைத்து, அவருக்கு தெரிந்தவர்களை அழைத்து, அந்தக் காட்சியை எடுத்து முடித்தோம. இப்படிப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன..
12.மேயாத மான் வெளியாகும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது ?
நாம் எப்படி யோசிக்கிறோமோ, அப்படியே அமைந்தால் அதுவே பெரிய வெற்றி. ஒரு படத்தின் வெற்றி,தோல்வி முக்கியமல்ல. தீபாவளி வெளியீட்டுச் சமயம், “மெர்சல்” படம் வெளியானது, திரையரங்கங்கள் போதுமானதாகக் கிடைக்கவில்லை. பல நாட்களுக்குப் பிறகு மெல்ல மெல்ல மக்கள் மேயாத மான் பற்றிப் பேசத் துவங்கினர். பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் என் படைப்பைப் பாராட்டினார்கள். எது எப்படி இருந்தாலும் எனக்கு மேயாத மானை விட ஆடை திரைப்படம் திருப்தியாக அமைந்தது.
13.மேயாத மான் படத்தில் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருப்பீர்கள், அது தானாக அமைந்ததா ?
மேயாத மான் படத்தின் முதல் 25 நிமிடம் இந்தக் குறும்படம் தான், இதில் ஹீரோவுக்கு ஒரு தங்கை கதாபாத்திரம் இருக்கும். இதில் ஹீரோவுக்கும் தனது தங்கைக்கும் முரண்பட்ட இரு காதல் கதைகள் இருக்கும். அந்தத் தங்கையின் காதல் கதை பெரிதும் பேசப்பட்டது. எனக்கு எந்தக் கதையும் எழுதும்பொழுது புதிதாக வரும் யோசனைகளைக் கொண்டு,அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வேன். அப்படி தான் இந்தத் தங்கையின் காதல் கதையும்.
14.மாஸ்டர் படத்தில் பணியாற்ற வாய்ப்பு எப்படி கிடைத்தது ?
நானும் இயக்குநர் லோகேஷ் அவர்களும் குறும்படங்கள் செய்துள்ளோம். எங்கள் இருவரின் குறும்படத்திற்கும் ஒரே இசையமைப்பாளர் தான். அவரின் ஸ்டுடியோவில் லோகேஷிற்கு எனது குறும்படத்தைக் காண்பித்தார். லோகேஷிற்கு மிகவும் பிடித்து விட்டது. பிறகு ஒரு நேர்காணலில் என் கருத்துகள் பலவும் லோகேஷிற்குப் பிடித்துப்போக தன்னுடன் பணியாற்ற அழைத்தார். அப்போது அவர் “கைதி” படம் செய்து கொண்டிருந்தார். நான் “ஆடை” படம் எடுத்துக் கொண்டிருந்தேன் அவரது படத்திற்குப் பல யோசனைகளைக் கூற அவர் அவற்றைப் படத்தில் அப்படியே வைத்துக்கொண்டார்.பிறகு அவருக்கு மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்னையும் அவருடன் பணியாற்ற அழைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

15.வசனம் எழுதும்பொழுது எதை மனதில் வைத்து எழுதுவீர்கள் ?
மாஸ்டர் படத்தில் வசனங்கள் மிக அளவாக வைத்துள்ளோம். எப்பொழுதும் போல் விஜய் அவர்கள் பேசும் பன்ச் டயலாக்-கள் மற்றும் அரசியல் வசனங்கள் இல்லாமல் ஒரு வேறுபட்ட படமாக இருக்க வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு கொடுக்கும் வசனங்களைக் குறைத்துக் கொண்டோம் .எந்த விவகாரத்திலும் சிக்காமல் வசனங்களை அமைத்தோம். இது பெரிய வரவேற்பைப் பெற்றது.
16.நெருப்புக் கோழி கதை வசனம் எப்படி யோசித்து எழுதினீர்கள் ?
இயக்குநர் லோகேஷும் நானும் அவரது பள்ளி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஒரு நண்பரைக் கேலி செய்துகொண்டிருந்தனர்.அந்த நண்பர் சொன்னார், முட்டையிடும் வலி கோழிக்குத் தான் தெரியும் என்று அவர் பேச, நாங்கள் சிரித்துவிட்டோம்.ஆனால் இரண்டு மாதம் கழித்து மாஸ்டர் படத்திற்குத் திரைக்கதை எழுதும்பொழுது, அதை ஞாபகம் வைத்து கோழிக்கு பதிலாக நெருப்புக் கோழியென்று எழுதினேன். இந்த வசனம் லோகேஷ் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது மற்றும் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது.
17.நீங்கள் இயற்றிய படங்களில் உங்களுக்குப் பிடித்த வசனம் எது?
“வயித்துக்கே வழியில்லாதப்போ வயித்துக்கு மேலயும் கீழயும் பத்தி எப்படி யோசிக்கிறது”_மேயாதமான்.
18. மாஸ்டர் படத்தில் விஜய் & விஜய் சேதுபதி அவர்களுடன் நீங்கள் பணியாற்றிய தருணங்கள் பற்றிக் கூறுங்கள்.
இருவரும் தமிழ் சினிமாத் துறையில் மக்களால் போற்றிக் கொண்டாடப்படும் இரண்டு பெரிய துருவங்கள். இருவரும் திரைப்பட வேலையைத் தாண்டி மிகவும் அக்கறை உடையவர்கள். என்னுடைய முயற்சிகள்,வேலைகளைப் பற்றி என்னிடம் விசாரிக்க கூடியவர்கள்.
விஜய் அவர்களைப் பிரியமுடன் படப்பிடிப்பின் போது நேரில் பார்த்தேன். அதன்பின்னர் இந்த மாஸ்டர் திரைப்படத்தில் தான் சந்திக்கிறேன். அவரை எப்போது பார்த்தாலும் நீண்ட நாட்கள் பழகியது போல எனக்கு ஒரு நெருக்கம் இருவரிடையே தோன்றும். இவர் தோளில் கை போட்டும் பேசுவார். தோளில் கை போட விட்டும் பேசுவார் என்று நடிகர் தனுஷ், விஜய் அவர்களைப் பற்றிக் கூறியது முற்றிலும் சரி. அவ்வளவிற்கு நம்முடன் நெருங்கிப் பழகும் தன்மை உடையவர்.
மாஸ்டர் திரைப்படத்திற்கு முன்பே நான் விஜய் சேதுபதி அண்ணாவிடம் எனது படம் பற்றிக் கதைகளைக் கூறியிருக்கிறேன் மற்றும் எனது குறும்படம் ஒன்றைக் கொடுத்து பார்க்கச் சொன்னேன். அவர் அதைப் பார்த்து விட்டு மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று நீண்ட நேரம் பேசினார்.
ஆரம்பத்தில் மிகவும் பயத்துடன் வேலை செய்ய ஆரம்பித்தேன். பிறகு அவர்கள் என்னை அவர்களில் ஒருவராகப் பார்க்க ஆரம்பித்தனர். எனவே இவர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் ஒரு பெரிய பரிசு எனக் கருதுகிறேன்.

19.நடிகர்கள் விஜய்,விஜய் சேதுபதி அவர்களுடன், நீங்கள் பணியாற்றும் போது அவர்களிடம் நீங்கள் கவனித்த ஒரு சிறப்பம்சம் என்றால் நீங்கள் எதைச் சொல்லுவீர்கள்?
விஜய் சேதுபதி அண்ணா, ‘நாம் இதைத் தான் பேச வேண்டும்’, ‘இவ்வளவு தான் பேச வேண்டும்’, ‘நாம் இப்படிப் பேசினால் பிறர் எவ்வாறு நினைப்பார்கள்?’ என எதுவும் மனதில் இல்லாமல், ஒரு வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி நாம் பேசி மகிழ்ச்சியாக இருப்பது போல் மிகவும் இயல்பாகப் பேசிப் பழகும் தன்மை உடையவர்.
விஜய் அவர்களை ஒரு முறை பார்த்துப் பேசும் போது, நாம் அவரிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களைப் பற்றி நினைவில் வைத்துக் கொண்டு அடுத்தமுறை பார்க்கும் போது அந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகே மற்றவிஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்.
இருவரும் ஆர்வமாகப் பேசிப் பழகி, நமக்காக நேரம் ஒதுக்கக் கூடியவர்கள்.

20.மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் & விஜய் சேதுபதி இருவருக்கும் நீங்கள் எழுதிய வசனங்கள் சண்டைக் கோழி மாதிரி மாறி மாறி போய்க்கொண்டே இருந்தது. அந்தத் திரைப்படத்தில் இவர்கள் இருவருக்கும் நீங்கள் எழுதிய வசனங்களில் உங்களுக்கு பிடித்தவைகள் என்ன?
விஜய்:- “ அது என்னடா சொன்னான் அவ ? என்ன புடுச்சவன-லாம் கொல்ல போறானா? டேய்! என்ன புடுச்சவன்லாம் கோடி பேர் இருக்கான் டா வெளில. முடிஞ்சா தொட சொல்லுடா பாப்போம்.”
விஜய் சேதுபதி:- “ இந்த ஆஸ்டிரிச் தெரியுமா? நெருப்புக் கோழி. இப்டி இருக்குமே! நெருப்புக் கோழி.அதோட முட்டை பாத்திருக்கியா? இவ்ளோ பெருசா. வாவ்! எவ்ளோ பெரிய முட்டை முட்டை போடுற கோழிக்குதான் தெரியும் * வலினா என்னானு.”
21.ஒரு படத்திற்கான கதையை எழுதி முடித்தவுடன் இந்தக் கதை சரியாக இருக்குமா? இல்லை சற்று வேறு மாதிரி மாற்றி அமைக்கலாமா? என்ற கேள்விகளுக்கு யாரை அணுகினால் தாங்கள் மனநிறைவு பெறுவீர்கள்?
கல்லூரி நண்பர்கள், என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள், இரும்புத்திரை திரைப்பட இயக்குநர் மித்திரன், இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் மற்றும் மாஸ்டர் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது சற்றுத் தெளிவு கிடைக்கும்
22.”இந்தச் சிக்கல் எல்லாம் வரும் என்று எவனும் எங்கிட்ட முன்னாடியே சொல்லவே இல்லையேடா” அப்படி நீங்கள் சினிமாத் துறைக்குள் சென்றவுடன் நினைத்த சில விஷயங்கள் பற்றி கூறுங்கள்.
ஒவ்வொரு திரைப்படம் தயாரிக்கும் போதும் எனக்கு நிறைய எண்ணங்கள் தோன்றும்; பொதுவாகவே ஒவ்வொரு திரைப்படமும் தயாரித்து வெளியான பிறகே அத்திரைப்படத்தின் நிறை குறைகளை தெளிவாகப் பிரித்தறிய முடியும். அதன் பின்னர் அத்திரைப்படத்தில் நாம் ஏற்கனவே இடம்பெறச் செய்ய வேண்டும் என எண்ணிய விஷயங்களை அடுத்த திரைப்படத்தில் இடம்பெறச் செய்யலாம்.

23. சினிமாத் துறைக்குள் நுழைய விரும்புவோருக்கு நீங்கள் கூற விரும்புவது ?
எப்போதும் தெளிவாக, வெளிப்படையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். நம்மைச் சுற்றி நடப்பதை நன்றாகக் கவனியுங்கள். உங்களைப் பற்றி உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நன்றாகக் கேட்டு தெரிந்து, அவர்கள் கூறியவற்றில் உங்களுக்கு எது தகுந்தது, எது சரியாக இருக்கும் என ஆராய்ந்து அதற்காகத் தொடர்ந்து செயலாற்றுங்கள். மற்றவர்களுடன் உங்கள் திறமைகளை ஒப்பிட்டு அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பொறுமையுடன், சந்தோசமாக உங்கள் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

